ஆசிரியர் தினம் ஒவொரு வருடமும் செப்டம்பர் மாதம் 5 ஆம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. இந்திய நாட்டின் இரண்டாவது குடியரசு தலைவர் டாக்டர். ராதாகிருஷ்ணின் பிறந்தநாளைதான் நாம் ஆசிரியர் தினமாக கொண்டாடிவருகிறோம். இந்த நாளில் கட்டாயம் நாம் டாக்டர். ராதாகிருஷ்ணின் பற்றி தெரிந்துகொள்ளவேண்டிய சில விஷயங்களை பற்றி இங்கே பார்ப்போம். திருத்தணி அருகே சர்வபள்ளி என்ற இடத்தில் 1888ஆம் ஆண்டு செப்டம்பர் 5ல் பிறந்தார் ராதாகிருஷ்ணன். தத்துவத்தை முதல் பாடமாகக் கொண்டு அதில் பி.ஏ பட்டமும் அதனை தொடர்ந்து அதில் எம்.ஏ பட்டமும் பெற்றார். இந்தியாவில் புகழ்பெற்ற மிகவும் பழமையான சென்னை பிரிசிடென்சி கல்லூரியில் உதவி விரிவுரையாளராக தனது பணியை தொடங்கினார்.
அதன்பின்னர் 1918ல் மைசூர் பல்கலைக்கழகத்தின் தத்துவப் பேராசிரியராக தேர்வு செய்யப்பட்டார். 1923ல் இந்தியத் தத்துவம் என்ற படைப்பை வெளியிட்டார். ஆக்ஸ்போர்டு உள்ளிட்ட உலகின் பிரபலமான பல்வேறு பல்கலைக்கழ மேடைகளில் சொற்பொழிவுகள் நிகழ்த்தியுள்ளார். 1931ல் ஆந்திர பல்கலைக்கழக் துணைவேந்தர், 1939ல் பனாரஸ் இந்துப் பல்கலைக்கழக துணைவேந்தர், 1946ல் யுனெஸ்கோ தூதுவராக நியமிக்கப்பட்டார். நாடு சுதந்திர அடைந்த பின், 1948ல் பல்கலைக்கழக கல்வி ஆணையத் தலைவரானார். அதன்மூலம் கல்வித்துறைக்கு சிறப்பான பங்காற்றினார். 1962 முதல் 1967 வரை நாட்டின் இரண்டாவது குடியரசுத் தலைவராக இருந்தது குறிப்பிடத்தக்கது.
Comments